Saturday, March 27, 2010

சாராத்து அம்பி....


'வாத்யாராத்தில பிறந்து, வாத்யாராத்தில் வாக்கப் பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்...'
அம்மா தினம் தினம் புலம்புவாள். கணேச கனபாடிகளுக்கு பெண்ணாகப் பிறந்து, மூணாம் க்ளாஸ் வாத்தியார் வைத்தியனாதய்யருக்கு கழுத்தை நீட்டியதைத் தான் அப்படி சொல்லிக் கொள்வாள்.
"இதோ பாருடா,அம்பி, இந்த கூடத்தில தான் நெல்லு குதிர்,குதிரா வெச்சிருப்பா. அதோ அங்கே மாங்காயும், மாம்பழமும் கூடை,கூடையாய்... காய்கறிகளைச் சொல்லு? ஒண்ணா..இரண்டா..இது எல்லாம் போறாதுன்னு எங்க அம்மாக்கு தை மாசம் மூட்டை, மூட்டையா அரிசி,பருப்பு,வெல்லம், வண்டி நிறைய வாழைக் காய் எல்லாம் தோட்டத்தில விளைஞ்சது அவ அண்ணா, தம்பி கதிராமங்கலத்திலேர்ந்து அனுப்புவா. எங்கம்மா பணக்காரியாக்கும். எங்கம்மா பேர்ல அந்த காலத்திலேயே மஞ்சக் காணி சொத்து எழுதி வைச்சிருந்தா, எங்க தாத்தா.'
அம்மா அந்த காலக் கற்பனையில் மூழ்கி விட்டால், அவளை லேசில் எழுப்ப முடியாது.
' மாத்தூர் ரொம்ப செழிப்பான கிராமம்டா. அங்க நாம இருந்த வரை ஒரு குறையும் இல்லே..இங்க இப்படி சீப்படணும்னு, என் தலையெழுத்துடா அம்பி..என் தலையெழுத்து'
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்த கிராமத்தைப் பற்றித் தான் எப்போழுது பார்த்தாலும் புலம்பல். சாமினாதனும் மாத்தூரில் பத்து வருஷம் இருந்திருக்கிறான். இருந்தாலும், இவ்வளவு தூரம் அவனுக்குத் தெரியாது.
இதோ எதித்தாற்போல், வெத்தலை போட்டுண்டு உக்காந்துண்டு இருக்காரே, அவரும் திருச்சினாப்பள்ளி ஜங்ஷனிலிருந்து வந்துண்டு இருக்கார். இவரைப் பார்த்தாக் கூட, தஞ்சாவூர்க்காரர் மாதிரித் தான் இருக்கு. முகத்தில் ஒரு அலட்சியம்...வெத்தலையை மடிக்கறதுல ஒரு தனிக் களை..பத்து தேசக் காராள்ள, தஞ்சாவூர்க் காரனைத் தனியாக் கண்டுப் பிடிச்சுடலாமே...!
சாமினாதன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்ததினால் அவனைப் பார்த்து லேசாய் சிரிக்கிறார். பதிலுக்கு இவனும் சிரித்தான்.
' சாருக்கு எந்த ஊரு?'
'மெட்றாஸ். எம் பேரு பாலசுப்ரமணியம்'
நட்புடன் கை நீட்டினார்.
'நா சாமினாதன். இங்க திருச்சில இருக்கேன்'
' மெட்றாஸ் தான் சாருக்குப் பூர்வீகமா?'
ஏதோ சிலபேரைப் பார்த்தா, நாமே பேசணும் போலத் தோணும். அவாளை முன்னப் பின்னத் தெரியாது. இருந்தாலும் இவா நமக்கு அன்னியமில்லே. நம்மோட ஒருத்தர்ங்கற மாதிரி ஒரு உந்தல். அவாளோட, பேசறதில ஒரு உற்சாகம்...
'இல்லே சார்..எனக்கு வலங்கை மான் பக்கத்தில....'
' வலங்கை மான் பக்கத்தில எந்த ஊர் சார்?'
இவனுக்குச் சொன்னாப் புரியுமா என்பது போல ஒரு பார்வை பார்த்தார், அந்த பாலசுப்ரமணியம்.
' கதிராமங்கலம்னு ஒரு கிராமம்'
' அடடே! மாத்தூருக்குப் பக்கத்தில இருக்கே, அந்த ஊரா?'
அவ்வளவு பெரிய மனிதரை, அழுக்கு வேட்டி, அப்பளக் குடுமி சாமினாதனிடம் ஈர்க்கிறது என்றால் என்ன அர்த்தம். பக்கத்து,பக்கத்து ஊர்க் காரர்கள்!
' மாத்தூர்ல கொஞ்ச நா நாங்க இருந்தோம், ஸார்'
கொஞ்ச நாளா? அங்கேயே பொறந்து, வளர்ந்து எட்டு வயசுல அப்பாவைப் பறி கொடுத்து, ஒண்ணுமே இல்லாம, திருச்சிக்கு ஒண்டிண்டு வந்ததையெல்லாம் இப்ப எதுக்குக் கிளறணும்?
' அங்க யார் அகம்?'
' ஸார் அகம்' - சொல்ல நாக்குத் துடிச்சது சாமினாதனுக்கு. வேண்டாம்.இவர் நாம தேடிண்டு போறவராகக் கூட இருக்கலாம்.எதோ ஒரு வரட்டுக் கௌரவம் தடுத்தது.
'உங்க அப்பா அந்த கிராமத்தில என்னவா இருந்தாரோ?'
பாலசுப்ரமணியம் இழுத்தார்.
'பயிர்ச் செலவு பண்ணிண்டு இருந்தார். வைத்யனாதய்யர்னு பேரு'
'நீங்க என்ன பண்றேள்?'
' ஆண்டார் வீதியில நாராயண சாஸ்திரிகளுக்கு அசிஸ்டெண்ட் ஆக இருக்கே'ன்னு அவர்ட்ட சொல்லிக்க கூச்சம்.
'நானும் விவசாயம் தான்'
'மாத்தூர்ல நான் இருபது வருஷம் இருந்திருக்கேன் சார். அங்க வைத்யனாதய்யர்னு ஒருத்தர், உங்கப்பா பேர் தான்.பள்ளிக் கூடத்தில வாத்யாரா இருந்தார். உங்களுக்குத் தெரியுமா?'
'தூக்கி வாரிப் போட்டது.
'ஊகும்.. தெரியாது.'
ரொம்பவும் கஷ்டப் பட்டுச் சொன்னான், சாமினாதன்.'அப்பாவைப் பத்தி புள்ளை கிட்ட கேக்கறேளே..இது நியாயமா. நான் தான்..நான் தான்' என்று மார்ல பட படன்னு அடிச்சுக் கணும் போல ஒரு ஆத்திரம். எல்லாத்தையும் எதுவோ ஒண்ணு வந்து தடுத்தது.
நாராயண சாஸ்திரிகளுக்கு நாலைஞ்சு வீடு தான் உபாத்யாயம். ஆண்டார் வீதியிலே ப்ரணதார்த்தி, சப்தரிஷியெல்லாம் ஓஹோன்னு கொழிக்கும் போது முருங்க மரத்துக்கேத்த கம்பளிப் பூச்சி மாதிரி இவர்ட்ட நாம் ஒட்டிக்கணும்னு, நம்ம தலையில எழுதி இருக்கே.
..... தோழனோடும், ஏழமைப் பேசேல் னு
சொல்லுவா. முன்ன, பின்ன தெரியாதவர்கிட்ட
நம்ம கஷ்டத்த சொல்லி எதுக்கு அவரையும் கஷ்டப் படுத்தணும்?' .....
சரசு அடிக்கடி சொல்லுவா.யாரோ கதிராமங்கலத்துக் காரர் ஒருத்தர் பட்டணத்தில பெரிய வேலைல இருக்காளாமே. உங்கப்பா கூட அவருக்கு சின்ன வயசுல நிறைய உதவி பண்ணியிருக்காராமே. கேட்டுப் பாருங்கோ. பழைய விசுவாசம் இல்லாமலாப் போயிடும். ஏதாவது உதவி பண்ண மாட்டாரான்னு, சரசு தலைக்குத் தலை அடிச்சண்டதனாலே, இவனுக்கும் ஒரு நப்பாசை. யார்கிட்டயோ அட்ரஸ் வாங்கிண்டு, குசேலர் கிருஷ்ணனை பார்க்கப் போறாப்பல, தைர்யமா பட்டணம் கிளம்பிட்டான். ஒரு வித்யாசம். இந்த குசேலருக்குக் கிருஷ்ணனைத் தெரியாது. போய்த் தான் அறிமுகப் படுத்திக்கணும்.
ஆச்சு..இன்னும் அஞ்சு நாள்ல ஆண்டார் வீதிக்கு ஒரு முழுக்கு..நாராயண சாஸ்திரிகளுக்கு ஒரு முழுக்கு. கதிராமங்கலம் அம்பி கை தூக்கி விட மாட்டானா, என்ன?
..... நாம தேடி வந்தது, இவர் தான் போல இருக்கே. இங்கேயே கேக்கலாமா...இல்லாட்டா மெட்றாஸ் போய்ப் பார்த்துக்கலாமா?...
'மெட்றாஸில யாராவது சொந்தக் காரா இருக்காளா?'
' இல்ல சார். மைலாப்பூர்ல பால்ய சினேகிதன் ஒருத்தன் இருக்கான். பார்த்துட்டு வரலாம்னு தான்..'
' அப்படியா, நானும் கொஞ்ச நாள் மைலாப்பூர்ல இருந்தேன்..'
பழைய நினைவுகளில் மறுபடியும் ஆழ்ந்தார், பாலசுப்ரமணியம். ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் மல்லிகைப் பூ விற்பவர்கள் அவர்களுடைய மௌனத்தைக் கலைத்தார்கள்.
பக்கத்தில நரசிங்க மங்கலம்னு ஒரு ஊர். ரொம்ப விசேஷமா ஐயனாருக்குத் திருவிழா நடக்கும். ராப்பகலா நாடகம். பக்கத்து, பக்கத்து
கிராமங்களிலிருந்து ஜனங்க வந்துடும். அவனவன் டெல்லி,பாம்பே, கல்கத்தான்னு வேலைல இருப்பான். எப்படித் தான் தெரியுமோ? பங்குனி மாசம் 'டாண்ணு' வேஷம் போட்டுக்க வந்துடுவான்.தப்பு..தப்பு..அவனை எதுவோ நரசிங்க மங்கலத்துக்கு வரவழைச்சுடும். இப்ப நாடகமெல்லாம் போடறாளோ இல்லையோ..'
பாலசுப்ரமணியம் சொல்லிக் கொண்டு போனார்.
லால்குடி வந்தது. போனது!
' சாம்பார் அம்பி கேள்விப் பட்டிருக்கேளா?' - பால சுப்ரமணியம் கேட்டார்.
' இல்லையே சார்' - என்ன வந்து விட்டது இந்த சாமினாதனுக்கு? எல்லாம் தெரிஞ்சுண்டும், ஒண்ணுமே தெரியாத மாதிரி, எது கேட்டாலும் இல்லை..தெரியாது தானா?..
" கிராமத்தில நிறைய பசங்க பேர் அம்பி தான்.வித்யாசம் தெரியணும்கறதுக்காக ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு காரணப் பெயர். எம்பேர் சாம்பாரம்பி. ஏன்னா, பள்ளிக் கூடத்தில மத்யானம், எப்போதும் சாம்பார் சாதம் தான் கட்டிண்டு வருவேனாம். இதேப் போல, அந்த வாத்யாராத்திலேயும் ஒரு அம்பி . அவன் பேர் சாராத்து அம்பி! சார்..சார்னு அவர் மேல நாங்க உசிரையே வைச்சிருப்போம்..நான் சின்ன வயசில, ரொம்பக் கஷ்டப் பட்டவன்! எனக்கு அப்பா கிடையாது.எங்க அம்மா கிராமத்தில பத்து, பாத்திரம் தேய்ச்சு வயத்த கழுவிண்டு இருந்தா. மாசம் முழுக்க பத்து தேச்சாலும், இப்ப டவுன்ல பத்து ரூபா தானேத் தரா..நாப்பது, நாப்பதைந்து வருஷத்துக்கு முன்னால, அதுவும் கிராமத்தில என்ன கிடைக்கும்? நினைச்சுப் பாருங்கோ?'
' கஷ்டம் தான்'
' கஷ்டமா ....கொஞ்ச நஞ்சமில்ல..அப்ப சார் தான் தூணாய் இருந்தார். எங்கம்மா, ஏதோ கூடப் பிறந்த சகோதரன் மாதிரி அண்ணா..அண்ணாம்பா..எங்கம்மா மட்டுமல்ல..ஊரே அவரை அண்ணான்னு தான் சொல்லும்! எத்தனை நாள் சாராத்தில நானும், அம்மாவும் சாப்பிட்டிருக்கோம் தெரியுமா? பெரிய தர்மிஷ்டர், அவர். சங்கர மடத்தில முத்ராதிகாரியாக வேறு இருந்தார்....இந்த உடம்பு..இந்த பாலசுப்ரமணியம்...இன்னிக்கு பெரிய ஆடிட்டர்..ஆயிரமாயிரம் சம்பளம்...இரண்டு பசங்க 'ஸ்டேட்ஸ்'ல இருக்காங்கன்னா யாரு காரணம்? எல்லாம் அந்த பெரியவர் போட்ட பிச்சை தான் சார்!'
சாமினாதனுக்கு ஏகப் பெருமையாய் இருந்தது.
'எல்லாம் இருந்து என்ன ப்ரயோஜனம்? கழுத்து மட்டும் குறை இருக்கே.. இன்னிக்கு அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப் பட்டுண்டு இருக்காம். எப்படியாவது நன்றிக் கடனை இந்த ஜன்மத்திலேயே தீர்த்துடணும்னு நான் அவாளைத் தேடிண்டு அலையறேன்.. எங்கே அந்த அண்ணா குடும்பம் கஷ்டப் படறதோ தெரியல்லே...!'
கண்களைத் துடைத்துக் கொண்டார், பால சுப்ரமணியம்.
சாமினாதனுக்கும் ஜலம் முட்டி மோதிக்கொண்டு வந்தது. ஜன்னல் வழியாய் வெளியே பார்க்கும் சாக்கில் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தான்.
அரியலூர் ஸ்டேஷன்!
இருவரும் காஃபி குடித்தார்கள். இவனே அவரை முந்திக் கொண்டு இருவருக்குமாய் காசு கொடுத்தான்.
' அதனால் என்ன சார், பரவாயில்ல..நம்மூர் காராளுக்கு இதுக் கூட செய்யக் கூடாதா நான்?'
சாமினாதன் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டான்.
'இங்கேயும் ஒரு மாத்தூர் இருக்கு. திருச்சி ஜில்லா கடேசில.. அங்க இறங்கலாம்னு இருக்கேன்..'
' என்ன திடீர்னு 'ப்ரோக்ராமை' மாத்திட்டேள். மெட்றாஸ் வல்லியா?'
' இல்ல சார்,இங்க பக்கத்து கிராமத்தில எங்க பெரியப்பா ஒருத்தர் படுத்த படுக்கையா கிடக்கார். அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. பார்த்துட்டு வரேன்.'
'இதை முன்னாடியே யோஜனைப் பண்ணியிருக்கக் கூடாதா? இப்ப மெட்றாஸ் சார்ஜ் நஷ்டமாயிடுத்தே...'
' அதனால என்ன சார், பரவாயில்ல..சின்ன சின்ன நஷ்டத்த எல்லாம் பார்க்கக் கூடாது. அதைப் பொருட்படுத்தாம இருக்கிறதே பெரிய லாபம்.'
பாலசுப்ரமணியத்துக்குப் புரியவில்லை. வினோதமாய் அவனைப் பார்த்தார்.
அவருக்கு புரியாவிட்டால் என்ன? சாமினாதனுக்குப் புரிந்து விட்டதே!
ரொம்பவும் சந்தோஷமாக வண்டியை விட்டு இறங்கிக் கொண்டிருந்தான், அந்த சாராத்து அம்பி!

(என் குறிப்பு: இந்த கதை நவம்பர் 1985 ஓம் சக்தி தீபாவளி மலரில் வெளி வந்தது)

3 comments:

இராகவன் நைஜிரியா said...

நல்ல கதை... ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க. அந்த தஞ்சை ஸ்லாங் ரொம்பவே அழகா கொண்டு வந்து இருக்கீங்க..

ரிஷபன் said...

கதை ஜோர் டா அம்பி.. சாரி.. மனசொன்றி படிச்சதுல இப்படி வந்திருச்சு.. தஞ்சாவூர் வெத்தல சீவல் வாய் மணக்க போட்ட திருப்தி.. கதை படிச்சதும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாராத்து அம்பி, சாரமுள்ள கதை, ஜோராகவே இருக்குது. பன்னீர் புகையிலை போடுபவர் அருகில் நின்றாலே கமகமவென ஒரு வாசனை வருமே அது போல இருந்தது.