Wednesday, May 12, 2010

மன்னிக்கத் தெரிந்தவர்கள்....


தணிகாசலத்தினால் தாங்க முடியவில்லை!

முனுசாமியை கேட்டே விட்டார்!!

" என்ன முன்சாமி..நீ எனக்கு இரு நூறு ரூபா தரணும்"

முனுசாமிக்கு ஒன்றூம் புரியவில்லை. நாம எதுக்கு அவருக்கு கடன் தரணும். நாம தான் அவர்ட்ட அஞ்சோ..பத்தோ வாங்குவோம்... இப்ப சத்தியா ஒண்ணும் இந்த ஆள்ட்ட கடன் கிடன்.. வாங்கலியே...

" நான் தர அளவுக்கு உங்களுக்கு அப்படி என்ன சாரு..பண முடை?"

ஜிவ்வென்று ஏறி விட்டது, தணிகாசலத்துக்கு.

" ராஸ்கல் விளையாடறியா? வெத்தல பாக்கு வாங்க பத்து ரூபா கொடுத்தா, இரண்டு ரூபா வெத்தில போக மீதி காசு எங்கே? இருபத்தைஞ்சு நாளைக்கு ஒரு நாளைக்கு எட்டு ரூபா மேனிக்கு இரு நூறு நீ இல்ல எனக்குத் தரணும்? "

அடப் பாவி டிப்ஸ் கொடுத்தான்னு இல்ல நினச்சுக்கிட்டு இருந்தோம்! அதைப் போய் கூசாம இப்படி கேட்கறானே, இந்த ஆளு..இப்ப திடீர்னு கேட்டா நா எங்க போவேன்..காசுக்கு..

இயலாமையின் வெளிப்பாடு வார்த்தைகளை தடிக்க வைத்து விட்டது, முனுசாமிக்கும்!

" என்ன வார்த்தை நீளுது...பெரிசாச்சேன்னு பார்க்கிறேன்...என்னய்யா...ராஸ்கல்..கீஸ்கல்னு... நீ வைச்ச ஆளா ... நா உனக்கு வெத்தில வாங்கி தர்ர..அப்படியே வாங்கி தந்தாலும் மேம்போக்கா பாக்கி சில்லறையை நீயே வைச்சுக்கோன்னு நீ எனக்கு சொல்லலை..?

" எப்ப சொன்னேன்?"

" அடச்சீ...நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்? போய்யா..."

" போய்யாவா...யார்ட்ட பேசற நீ ? "

" உன்ட்ட தான்யா பேசறேன் ...போய்யா...போய்யா...போய்யா...."

வெறி பிடித்தாற் போல் முனுசாமி கத்த..மொத்த ஆஃபீஸும் அவரையேப் பார்க்க...

கூனிக் குறுகி நாற்காலியில் சாய்ந்தார், தணிகாசலம்!!

அந்த நாற்காலி.. அவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த டெப்டி தாசில்தார் நாற்காலி.....

அந்த காலத்தில்..அவர் வேலைக்குச் சேர்ந்த அந்த நாளில் இந்த டெப்டி தாசில்தார் நாற்காலி என்பது கிட்டத் தட்ட ஒரு ராஜா மாதிரியான பதவி. அதிகாரம் தூள் பறக்கும். வீட்டு வேலைக்கு ஒரு ஆள் .... தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற ஒரு ஆள்..கைக்குழந்தை இருந்தால் அதைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் என்று ஏக உபசாரம்..

ஆனால் ,இப்போதோ..தடுக்கி விழுந்தால் கூட,ஒரு தாசில்தார் மேல தான் நாம விழுந்தாகணும்! அவ்வளவு தாசில்தார்கள்! இவ்வளவு பேர் 'தாசில்' பண்ணினால் இந்த பூமி எப்படி தாங்கும்? எவன் நம்ம மதிக்கப் போகிறான்? முன்சாமி கூட முன்பல்லக் காட்டி கிண்டலா இளிச்சுட்டுப் போறான்...'

மெள்ள... தத்தி..தத்தி... ஒரு டெப்டி தாசில்தார் நாற்காலியில் இப்போது தான் அவர் உட்காருகிறார். முப்பத்து மூன்று வருடங்களை முழுசாய் சாப்பிட்டு விட்டு, பெரிய மனசு பண்ணி அந்த நாற்காலி இப்போது தான் அவரையே உட்கார அனுமதித்தது..

அதற்குள் இப்படி .... !!

முனுசாமி நம்ம கைத்தடி..நம் சொல் பேச்சு கேட்கும் பையன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தாலும்..அது கொஞ்சம்..கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்து.... ரொம்ப இடம் கொடுத்து விட்டோமோ..என்கிற சந்தேகம் இன்று பயமாகி ..... இப்படியா வெடிக்கும் ?

ஏன் இப்படி?

எதனால் இப்படி ??

யோசிக்கவே முடியவில்லை..

ஒவ்வொரு நாளும் போலவே அன்றும் அந்த பத்து மணி சுமாருக்கு....

உள்ளிருந்து குரல்..

" தணிகாசலம் சார்.."

'... சார் உங்களை கூப்பிடறார்..' என்றார், பக்கத்து சீட்!

நாற்காலியை நன்றாக சுவற்றோடு சுவராக சாய்த்து உட்கார்ந்து கொண்டார், தணிகாசலம். அந்த ஆஃபீஸில் அவர் வேலைக்குச் சேர்ந்த அந்த நாளை அவர் மறந்தாலும், அவர் சாய்ந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு கலர் சுவர் மறக்காது. அந்த சுவரில் வெள்ளை அடித்த நாள்..அவர் இங்கு வேலைக்கு சேர்ந்த நன்னாள்!

அவரை, அவ்வளவு சர்வீஸ் போட்ட வரை...ஒரு டெப்டி தாசிதாரை... நேற்று வந்த ஆபீசர் நாக்கு மேல பல்லு போட்டு கூப்பிடுவதாவது!

'இதோ வரேன்'னு சொல்லு..வர..வர..ஆபீஸ்ல வயசானவங்களுக்கெல்லாம் 'ரெஸ்பெக்டே' இல்ல..ஆளை விட்டு கூப்பிடறது..இல்லாட்டி உள்ளேர்ந்து கத்தறது..ஏதாவது சந்தேகம்னா இங்க வரலாமில்ல...துரை சீட்ட விட்டு நகர மாட்டாரு..நாம தான் சின்னப் புள்ள கணக்கா ஓடணும். ச்சீ...ஏண்டா, இந்த ஆபீஸ்ல வேலை பார்க்கறோம்னு தோணுது...'


தணிகாசலம் பிள்ளை லேசில் ஓய மாட்டார். இங்கு இருக்கும் ஆட்களிலேயே அவர் சீனியர் என்பதால் யாரும் அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதை அவர் 'அட்வாண்டேஜ்' ஆக எடுத்து கொண்டு அப்பப்ப ஒரு சின்ன 'தர்பார்' நடத்தி விடுவார்.

' ஐயா.. உங்களை கூப்பிடறாருங்க..'- இது முனுசாமி.

'போறேம்பா..போறேன்..அந்த பச்சக் கலர் ஃபைலை இப்படி கொடு.....முன்சாமி..நீ என்ன பண்றே..அந்த மூலக் கடையிலப் போய் வெத்தல வாங்கியா..'

' டெஸ்பாட்ச் இருக்குங்க... ஐயா..'

' சொன்னாக் கேளு.. ஆஃபீஸ் வேலை ஓடியாப் போயிடும். இந்தா பத்து ரூபாய்...போய் வெத்தல வாங்கியா..அவன் கடைய சாத்திட்டு சாப்பிடப் போயிடப் போறான்..'

' எதாவது சொன்னா ஆஃபீஸ் வேலை இருக்குன்னு சால்ஜாப்பு சொல்றான். நாம சொல்றதை யாரு கேக்குறாங்க இந்த ஆஃபீஸ்ல...!!..நம்ம மரியாதைய காப்பாத்திக்கணும்னா நாம தான் கம்முனு இருந்துடணும்.'

புலம்பிக் கொண்டு உள்ளே சென்றார், தணிகாசலம்.

சப்-கலெக்டருக்கு விளக்கம் கொடுத்து விட்டு சீட்டில் வந்து உட்கார்ந்தார். கொஞ்ச நேரம் கழித்து முனிசாமி வெத்திலைப் பாக்கெட்டுடன் வந்தான். இப்போதும் பாக்கி சில்லறை தரவில்லை!

பத்து ரூபாய் நோட்டு கொடுத்தால், இரண்டு ரூபாய் வெத்திலைப் பாக்குப் போக, பாக்கி எட்டு ரூபாய் கொடுப்பது தானே முறை. இவராக பாத்து எதாவது கொடுத்தால் அது நியாயம். அவனாக எடுத்துக் கொண்டால்....

கணக்கு போட்டுப் பார்த்தார். இந்த மாதம் முழுக்க இப்படித் தான் செய்கிறான்! ஆக இருபத்தைந்து நாளுக்கு எட்டு ரூபாய் மேனிக்கு சுளையாய் விள்ளாமல்..விரியாமல்..இரு நூறு ரூபாய்..இரு நூறு ரூபாயா..!!!! அவரால் தாங்க முடியவில்லை!

அவரும் ...இன்று கேட்டு விட வேண்டும்..நாளை கேட்டு விட வேண்டும் என்று ஒவ்வொரு நாளாய் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விட்டார். இப்போது பார்த்தால் அது இரு நூறு ரூபாய் வரைக்கும் வந்து விட்டது!

என்றிலிருந்து இது ஆரம்பம்? யோசித்துப் பார்த்தார். ஆ...ஞாபகம் வந்து விட்டது! புது சப் கலெக்டர் வந்த நாள். பழம் தின்னு கொட்டை போட்ட ஆட்கள் அத்தனை பேரும்! வந்த ஆளைப் பார்த்தால் ரொம்ப சிறு வயசு!

முனுசாமி முதுகில் தட்டி சொன்னார், தணிகாசலம்.' முன்சாமி...புது ஆபிசரைப் பார்த்தியா டிப்பார்ட்மெண்ட்ல என் சர்வீசு அவர் வயசு.. என்னத்த பண்ணப் போறரோ..'என்று இவர் சொன்னதுக்கு சிரித்துக் கொண்டே போனவன் தான். சில்லறை கொடுக்கவில்லை!

அதை முனுசாமி 'அட்வாண்டேஜ்' எடுக்க..

அது இப்போது படீரென வெடிக்க..

விஷயம் ஸப்-கலெக்டர் காதுக்குப் போய் விட....

இருவரையும் அவர் ரூமுக்கு கூப்பிட..

முனுசாமிக்கு ஒரு வார்னிங் லெட்டர்...

" சார்...நான் அப்பாவிங்கோ...இவரு உங்களைப் பத்தி என்னல்லாம் சொன்னார் தெரியுமா...நீங்க ரொம்ப சின்ன வயசு ..திறமை போறாது..எப்படி சமாளிக்கப் போறார் பாரேன்னு எங்கிட்டேயே சவால் விட்டாருங்கோ...."

அடப் பாவி எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறானே...

முனுசாமி சொல்ல..சொல்ல... ....தணிகாசலத்துக்கு கால்கள் தரையிலிருந்து வெடவெடவென நழுவி, எதோ அதல பாதாளத்துக்கு போவது போல...

" ஸாரி..ஸார்..." என்றார் குரல் தழுதழுக்க..

" தட்ஸ் ஆல் ரைட் "


இப்பொழுதெல்லாம்..'தணிகாசலம் சார்' என்று குரல் வந்தால் போதும். வேஷ்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் உள்ளே ஓடுகிறார் தணிகாசலம்!

மன்னிக்கப் பட்டவரே, மன்னித்ததினால் முனுசாமிக்கு கொடுத்த அந்த 'வார்னிங்க் லெட்டரும் 'வித்ட்ரா'
ஆகி விட்டது இப்போது !!

ஒரு வாறாக முடிந்து விட்டது...!!!.

எல்லாமுமே.....!!!!

12 comments:

Rekha raghavan said...

ஒரு அரசாங்க அலுவலகத்தில் நடப்பதை அப்படியே கண்முன் பார்த்தது போலிருந்தது. அதனுடன் கூடவே ஒரு கதையையும் பின்னிய விதம் அருமை.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

வை.கோபாலகிருஷ்ணன் said...

விறுவிறுப்பாகச் சென்ற நகைச்சுவையான கதையை சப்பென்று முடித்து நிறுத்தி விட்ட உம்மை, ஸப்-கலெக்டர் தணிகாசலத்தையும், தணிகாசலம் முனுசாமியையும் மன்னித்தது போல மன்னிக்க முடியாது என்னால். இது போன்ற நகைச்சுவை விருந்துகள் தொடர்ச்சியாகத் தர வேண்டும் நீங்கள். அதுவே உமக்கு நான் தற்போது அளிக்கும் வார்னிங் லெட்டர்.

கே. பி. ஜனா... said...

நல்ல காமெடி! 'வல்லவனுக்கு வல்லவன்!'

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முடிவு. நன்றாக இருந்தது.

வெங்கட் நாகராஜ்

ரிஷபன் said...

அரசு அலுவலகம் உள்ளே போய் வந்த திருப்தி..

வசந்தமுல்லை said...

எங்கள் அலுவகத்திலும் இப்படி தணிகாசலம் போல் ஒரு கேரக்டர்.அவர் பண்ண கூத்தினால் அவருக்கு அவரே பனிஷ்மென்ட் கொடுத்தது போல் டிபார்ட்மென்ட் ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டது. அதுவுமில்லாமல் உயர் அதிகாரியை பழித்தும் பேசினார்.எல்லாம் தெரிந்தது போல் அலட்டிக்கொண்டால் இப்படித்த்தான் ஆகும். .எங்கள் கதையையே நேரில் பார்த்தது போல் இருந்தது உங்கள் நடை.நடைமுறை வழக்கிலேயே கதையை அமைத்த உங்களுக்கு என் இனிய சொட்டு. என்னவென்று சொல்லி உங்களை பாராட்ட?
மொத்தத்தில் ஒரு கதை! ஓஹோன்னு ஒரு சூப்பர் கதை!!!!!!

சுந்தர்ஜி said...

சம்பாஷணை அபாரம் வெற்றிலை நெய்ச்சீவலுடன் மணக்க மணக்க.

Unknown said...

really good - Bash

vasan said...

`ம‌ன்னிப்பு` ஒரு மக‌த்தான‌ ம‌ந்திர‌ வார்த்தை தான்.
த‌ருப‌வ‌னுக்கும், பெருப‌வ‌னுக்கும் ஒருங்கே கிட்டும்
சிறகு.

CS. Mohan Kumar said...

எட்டு ரூபாய்க்கு வாங்கிட்டு ரெண்டு ரூபா டிப்ஸ் எடுத்துக்கலாம். அதெப்படி மாத்தி செய்ய முடியும்? அதோட அவன் எட்டு ரூபா திரும்ப தராதது தெரிந்து அவரே தொடர்ந்து எப்படி பத்து ரூபா தந்து அனுப்புறார்?? அதான் இடிக்குது; மத்த படி அரசு அலுவலகத்தை கண் முன்னே கொண்டு வந்துடீங்க

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திரு மோகன் குமார் அவர்களுக்கு,

நாலு பேருக்கு முன்னால,ஆஃபீஸ் அட்டெண்டரை பர்ஸனல் வேலைக்கு எப்படி நான் அனுப்பறேன் பார்த்தியா என்று தன் ஈகோவை..பவிஷை...காண்பிக்க அவ்வாறு செய்திருக்கிறார்..அந்த மோஹம் அடுத்தடுத்த நாட்களில் அவரை மறக்கடிக்க..வாரக்கடைசியில் கணக்கு போட்டுப் பார்க்க, ஐம்பத்தாறு ரூபாய் வந்து..திங்கள்கிழமை அதை கேட்கலாம் என்றிருந்து..அதுவும் மறந்து.. இரு நூறு ரூபாய் என்றவுடன் ப்ரச்னை வெடித்திருக்கலாம், அல்லவா? மேலும் அவரது தேவை வெறும் இரண்டு ரூபாய் ..அவ்வளவு தான்! ஐந்து ரூபாய் கிடைக்காத நிலையில்,வெறும் இரண்டு ரூபாய் மட்டும் கொடுத்தால், வாங்கிக் கொண்டு வர மாட்டான் என்கிற பயமும் இருக்கலாம் ..அல்லவா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பஸ்ஸிலிருந்து இறங்கும் போது நண்பர் சொன்னார்,’ஸார், இவர் தான் எங்க ஆஃபீஸ் தணிகாசலம்’ என்று. சுட்டிக் காட்டப் பட்டவர் நம் தணிகாசலம் போல் இல்லை..என்றாலும் அதிர்ந்தேன். நம் கதையின் கேரக்டர், படித்த நண்பரின் மனதில் ஆழமாய் வேரூன்றி இருந்தால் அல்லவா, வேறு ஒருவரின் குணாதிசயங்கள் லிங்க் ஆக முடியும்? இது இந்த கேரக்டருக்குக் கிடைத்த கிஞ்சித்து வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?