Saturday, July 17, 2010

சபாஷ்...சரியான ஜோடி!!!!


வசந்தனுக்கு காலையில் கண் விழித்ததும்,இடது கையில் சிகரெட், வலது கையில் நியூஸ் பேப்பர்....டீபாயில் சுடசுட ஆவி பறக்கும் காஃபி...மூன்றும் இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று குறைந்தாலும் 'மூட்'
அவுட்டாகி விடும்.
இன்னும் காஃபி வந்த பாடில்லை.
'....குமுதினி....காஃபி ரெடியா?"- இருந்த இடத்தில் இருந்தே கடுப்புடன் கத்தினான், வசந்தன்.
'குமுதினியாம்..குமுதினி...ச்சே..குமுதா...கும்மா..கும்மி...கும்மு.'என்று எப்படியெல்லாம் அழகாகக் கூப்பிடலாம்?'

'மைது டியர்' என்று உற்சாகமாக அழைத்துக் கொண்டே,உள்ளே நுழையும் எதிர் வீட்டு திலீப்பை நினைத்துக் கொண்டாள்.

' நம்மளதும் இருக்கே..சுத்த ரசனை கெட்ட ஜன்மம்!

காஃபியை ' ணங்' கென்று டீபாயில் வைத்தாள்.

அனிச்சையாகப் பார்வை எதிர் வீட்டில் சென்றது.

தன்னை மறந்த நிலையில், மூக்கு ஒன்றுடன் ஒன்று உரசும் போதையில்...கண் துஞ்சி..கட்டி அணைத்து..அவள் நெற்றியில்...கன்னத்தில்..இதழில் ..இன்முத்திரைகள் பதித்து...பிரியா விடை பெற்று..ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்யும் திலீப் ....
தெரு முனையில் அவன் தலை மறையும் வரை கையை ஆட்டிக் கொண்டிருக்கும் மைதிலி...
வசந்தன்....பெயரில் தான் வசந்தம்!!
வெள்ளிக் கிழமை பூ வாங்கிக் கொண்டு ...சம்பளத்துடன் அல்வா வாங்கி வரும் ரகம் இவனில்லை...
ஹூம்.....அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
வீட்டு வேலைகளை முடித்து விட்டு வாசலுக்கு வந்தாள்.
எதிர் வீட்டு வாசலில் மைதிலி!

என்னவோ, அவளைப் பார்த்ததும் வீட்டுக்குக் கூப்பிட வேண்டும் போல் இருந்தது.

" வாங்களேன்..மைதிலி,வீட்டுக்கு.."
வந்தவளை பிஸ்கெட்,காஃபி கொடுத்து உபசரித்தாள், குமுதா.
" மைதிலி..நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.."
" எப்படி சொல்றீங்க?"
" நீங்க ரெண்டு பேரும் 'மேட் ஃபார் ஈச் அதர்' உங்க மிஸ்டர் மாதிரி கிடைக்கறதுக்கு ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கணுங்க....'
ஆழ் மனத்து ஏக்கம் வார்த்தை வடிவம் பெற்று...வாயிலிருந்து வந்து விழுந்தன.
விழுந்து...விழுந்து ..சிரித்தாள், மைதிலி.
" எல்லாம் வேஷங்க.. மேடையில்லாம..அரிதாரம் பூசாம...நாடகம் ஆடிக்கிட்டிருக்கோம்...நாங்க.ரெண்டு பேரும்.."
" நாடகமா???"
" உங்கக் கிட்ட சொல்றதுக்கு என்ன ..சின்ன வீடு 'செட்டப்' பண்ணியிருக்காரு அவரு. மனசுக்குள்ள எனக்குத் தெரியாதுன்னு நினைப்பு..நானும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது கிடையாது."
" குமுதாவிற்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...இப்படிக் கூட நடக்குமா?"
" ஏன்..நீங்க இதைக் கேட்கக் கூடாதா?"
" யார்...யாரைக் கேட்கிறது? இதெல்லாம் அவங்கவங்களுக்கேத் தோணனும்..நாம கேட்டா, பயம் போயிடும்.."
" என்ன சொல்றீங்க"
" உண்மைதாங்க...நாம கேட்காத வரைக்கும்..'கட்டின பெண்டாட்டிக்குத் துரோகம் செய்யறோமே'ங்கற பய உணர்ச்சி, மனசு மூலைல எங்கேயாவது ஒட்டிக்கிட்டு இருக்கும். நாம கேட்க ஆரம்பிச்சோம்னா..அந்த பயமும் விட்டுப் போய்..வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்துடுவாங்க...'இவளால, என்ன செய்ய முடியும்ங்கற தைர்யம் வந்துடும்!'

"அப்படியும் செய்வாங்களா, என்ன?"
" ஏன் செய்யக் கூடாது? ப்ராக்டிகலா 'திங்க்' பண்ணிப் பார்த்தேன். இவர் துரத்தினார்னா - அம்மா கிடையாது, எனக்கு. அப்பா அண்ணன் வீட்டோடு ஒண்டிக் கிட்டு இருக்காரு - நான் எங்கே போறது? அதனால, தெரிஞ்சதைத் தெரியாதது போல இருந்துடறது தான் புத்திசாலித்தனம் போல் தோணிச்சு.."

" சாரி...மைதிலி, உங்க மனசைப் புண்படுத்திட்டேன்" என்றாள் குமுதா, உண்மையான வருத்தத்துடன்.

" அதெல்லாம் இல்லீங்க..விஷத்தை முழுங்கின வேதனை மாதிரி உள்ளே துடிச்சுக்கிட்டும்...வெளியே நடிச்சுக்கிட்டும் இருக்கிற இந்த கண்றாவியை...யார்ட்டயாவது சொல்லி நானும் இறக்கிக்கணுமில்ல..."
சோகம் அவளையும் மீறி குபுக்கென்று கண்களில் பொங்கியது.



இப்போதும்.......அனிச்சையாகப் பார்வை எதிர் வீட்டில் செல்ல....

தன்னை மறந்த நிலையில், மூக்கு ஒன்றுடன் ஒன்று உரசும் போதையில்...கண் துஞ்சி..கட்டி அணைத்து..அவள் நெற்றியில்...கன்னத்தில்..இதழில் ..இன்முத்திரைகள் பதித்து...பிரியா விடை பெற்று..ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்யும் திலீப் ....
தெரு முனையில் அவன் தலை மறையும் வரை கையை ஆட்டிக் கொண்டிருக்கும் மைதிலி...
ஆற்றாமையால், கண்களைத் துடைத்துக் கொண்டாள், குமுதா இங்கே !!!
பின்குறிப்பு :
இச்சிறுகதை சாவி 22.4.92 இதழில் வெளி வந்தது

8 comments:

ராம்ஜி_யாஹூ said...

is savi magazine coming now

வை.கோபாலகிருஷ்ணன் said...

18 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தகைய ஒரு சற்றே வித்யாசமான (புரட்சிகரமான) முடிவுடன் கூடிய கதையை எழுதி வெளியிட்டுள்ள, தாங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய ஒரு ஆளு தான். தாங்கள் எழுதி பிரசுரிக்கப்பட்ட எல்லாக்கதைகளையுமே ஒவ்வொன்றாக இதுபோல பிளாக்கில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் ஆர். ஆர். எம். அவர்களை என் போன்றவர்களால் முழுமையாக உணர முடியும்.

ரிஷபன் said...

பார்வைகள்தான் எப்படி எப்படி ஒருவருக்கொருவர் மாறுகின்றன.. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது என்கிற படிப்பினை..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல கதை

அண்ணாமலை..!! said...

அருகில் சென்று பார்க்காதவவரை அக்கரை பச்சையாகவே இருக்கிறது!
சிந்திக்க வைக்கும் கதை!

வெங்கட் நாகராஜ் said...

பதினெட்டு வருடம் கழித்து நான் படித்தாலும், நல்லதொரு கதையைப் படித்த திருப்தி எனக்கு. சில விஷயங்கள் நாம் பார்ப்பதைப் போலவே இருந்து விடுவது இல்லை என்பதை அழகாக உணர்த்தியிருக்கீங்க. கதா பாத்திரங்களின் பெயர்களும் நல்ல தமிழில் அழகாக இருந்தது.

vasan said...

'இல்லாத‌ பொருள் மீது,
எல்லோர்க்கும் ஆசை வ‌ரும்".
பெண்க‌ளின் ம‌ன ஓட்ட‌தையும்,
நிச‌ர்ச‌ன‌ம் புரித‌லையும், அழ‌காய்
இரு பொண்க‌ளின் வ‌ழியாய். ந‌ச்.

Anonymous said...

பார்ப்பவை எல்லாம் உண்மையில்லை.யாதர்தத்தை உணர்த்தும் கதை அய்யா.அதனால் தரமான வார இதழில் அப்போழுதெ வந்து ஊள்ளது.மற்ற கதைகள் இருப்பினும் வெளியிடுங்கள்