Friday, June 24, 2016

சுண்டல்!

பள்ளி கொண்ட பெருமாள் சற்றே கண் விழித்தார்...
"என்ன ஸ்வாமி"
"பூலோகத்தில் யாருக்கும் சிரத்தை இல்லை...பக்தி செய்வோரும் யாரும் இல்லை...."
"எப்படி சொல்கிறீர்கள்? ஊரே அமர்க்களப் படுகிறதே..ஆங்காங்கே ஒவ்வொரு காலனியிலும் சின்ன சின்ன 
கோவில்கள்...யாகம்...சொற்பொழிவு...அமர்க்களம் படுகிறதே ஸ்வாமி!"
"எல்லாம் வேஷம் தேவி..மாலுக்கு போய் வந்ததை பெருமையாக சொல்வது போல் என்னை பக்தி செய்வதை பெருமையாய் சொல்கிறார்கள்..ஒரு..ஒரே ஒரு பக்தனை எப்போது காண்பேனோ?"
பெருமூச்சு விட்ட பெருமாள் கண்ணில் திடீரென ஒரு மின்னல்.
"தேவி...அதோ பார்...ஒலிப் பெருக்கியில் announce பண்ண, எல்லாரும் திமு திமு வென ஓட...அதோ..அங்கே ஒருவன் மெய் மறந்து பக்தி செய்து செய்து கொண்டிருக்கிறானே..வா..வா..போய் பார்ப்போம்"
"என்ன ஸ்வாமி இது...அவர்கள் என்ன announce செய்கிறார்கள்? இவர்கள் ஏன் கபாலி பட முதல் ஷோவுக்கு ஓடுவது போல் முண்டியடித்து இப்படி ஓடுகிறார்கள்..அந்த ஒருவன் மட்டும் ஏன் எந்த ஸ்மரணையும் இல்லாமல், இப்படி மெய் மறந்து பக்தி செய்கிறான்?"
"வா,வா தேவி...சீக்கிரம் போகலாம்,வா"
"சஸ்பென்ஸ் தாங்கவில்லையே ஸ்வாமி!"
"பெருமாள் கோவிலில் சுண்டல் தருவதாக announce பண்ணினதும் மக்கள் எப்படி ஓடினார்கள்...அவன் ஒருவன் மட்டும் எப்படி பக்தி செய்கிறான், பாரேன்..விசாரிக்கலாம் வா!"
இருவரும் அவனை நெருங்கி விட்டார்கள்..
பெருமாளுக்கு ஏக பெருமை!
"பக்தா..உன் பக்தியை கண்டு மெச்சினேன்..சுண்டல் என்று announce பண்ணியும் பதறாமல் நீ மட்டும்...."
பெருமாளின் குரல் தழுதழுத்தது.
"இன்னாது நான் சுந்தர லிங்கம் இல்லை சாரே!"
வலது கையால், வலது காதை பிடித்துக் கொண்டு இடது புறமாக அவன் திரும்ப,
மயங்கி விழுந்தார்,பெருமாள்..
முழிப்பு வந்ததும் நல்ல வேளை...பழசு எதுவும் ஞாபகம் வரவில்லை, அவருக்கு.
அனைத்தும் அறிந்த ஆதிசேஷன் மட்டும் அநிச்சையாய் பெருமூச்சு விட்டான்,அப்போது!

Saturday, June 18, 2016

குரு. உபதேசம்!

"குருவே, இந்த கட்டைக்கு ஒரு சந்தேகம்!"
"ம் ..சொல், சிஷ்யா?"
"எல்லாமே, கர்ம வினைப் படி தானே நடக்கிறது?"
"ஆம், சிஷ்யா..இதிலென்ன திடீரென சந்தேகம்,உனக்கு?"
"பின் தெய்வ பலம் ததேவா என்று ஏன் சொல்கிறார்கள்,குருவே?"
இவனுக்கு புரிகிறார்போல எப்படி சொல்வது என குரு யோசித்தார். உத்தரத்தில் கருந்தேள் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.
"சிஷ்யா, அங்கே பார்..என்ன தெரிகிறது?"
"கருந்தேள் குருவே!"
"தேள் உன்னை கொட்டுகிறது என்பது உன் கர்மா.தெய்வத்தினாலும் உன்னை காப்பாற்ற இயலாது?"
"சரி..அப்ப தெய்வ பலம் என்பது?"
"தேள் கொட்டிய அதே சமயம் உன் வீட்டில் தேள் கடிக்கு மருந்து இருப்பது தான் தெய்வ பலம்!ஸ்வாமி அங்கு கொட்டிய இடம் வலிக்காமல் இருக்க, உன் வீட்டு அலமாரியில் மருந்து வைத்து விடுவார்.."
"அப்ப, தெய்வ பலம் இல்லை என்றால்?"
எரிச்சலுற்ற குரு சொன்னார்:
"தேள் கொட்டுவதற்கு முன்னாலேயே, தேள் கடி மருந்து கொட்டிப் போறது!" 

Friday, June 17, 2016

நித்யாவின் பாட்டு!

என் பெண் நித்யா US ல் இருக்கிறாள்..அவளைப் பார்க்க நாங்கள் போயிருந்தோம்...ஒரு நாள் ஏகாந்தமான மாலை வேளையில் அவள் எனக்காக பாடிய பாடல் இதோ!
https://www.youtube.com/watch?v=4N4nvob6XhM

கோரா கும்பர்

"என்னைத் தொடாதே...உன் விட்டலன் மீது ஆணை...என்னைத்தொடாதே!"
பெண் புலி கர்ஜித்தது..
துளசியை அடிக்க ஓங்கிய கை ஓங்கியபடியே.....
நடந்த காரியம் என்ன சாதாரணமானதா?
கொலை ஐயா...கொலை!
பகவத் ஸ்மரணை இருக்க வேண்டியது தான்...
அதற்காக இப்படியா?
அளவுக்கு அதிகமானால் பக்தியும் நஞ்சாகி விடுமா,என்ன?
நஞ்சாகி விட்டதே........
பெற்ற தகப்பனே தன் பிஞ்சு குழந்தையை கொல்வதாவது?
என்ன ஒரு அக்ரமம்?
ப்ரம்மத்தில் லயித்தவனுக்கு எல்லாமே ப்ரம்மானந்தம்  என்று விட்டு விட முடியுமா,என்ன?
காலுக்கடியில்...ரத்த விளாறாய்...சேறோடு...சேறாய்....சிசு!
பெற்ற தகப்பனின் காலே, காலன் ஆகி விட்டதா?
தூளியில் படுத்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு,பக்கத்து கடைக்குச் சென்றாள், துளசி.
வந்து பார்த்தால், குழந்தையைக் காணோம்!
கணவனை உலுக்கினாள்....பர உலகில் பகவத் ஸ்மரணையில் ஈடுபட்டிருந்தவன் இவ்வுலகுக்கு வந்தான்...
எதேச்சையாக கணவன் காலடியில் பார்த்தவளுக்கு........
ஐயோ...என்ன ஒரு அவலம்?
அவள் அங்கு போனதும் குழந்தைக்கு முழிப்பு வந்து விட்டது....அம்மா...அம்மா..என்று கத்திப்பார்த்தான்...அம்மாவைத் காணோம்!
தூளியிலிருந்து குதித்தவனுக்கு,வாசலில் அப்பா இருப்பது தெரிந்தது....
ப்ப்பா...ப்பா...என்று கத்தினான்,குழந்தை...
விட்டல....விட்டல...என்கிற ஸ்மரணையுடன்,கால்கள் மண்ணை பிசைந்து கொண்டிருக்கும் கோராவிற்கு குழந்தையின் குரல் கேட்கவில்லை!
தகப்பன் பக்கத்தில், வந்த குழந்தை மண்குழியில் தவறிப் போய் விழுந்து விட...
இது எதுவும் தெரியாத நிலையில், மண் பாண்டங்கள் செய்ய குழியில் இருந்த மண்ணை கால்களால் பிசைந்து கொண்டு...விட்டலன் ஸ்மரணையில்....ஜடமாய்....
குழந்தையாக வந்தவன் மகானுபாவன்...ஒரு வருடம்...ஒரே வருடத்தில் தன் கர்ம வினை முடித்து,
அதுவும் ஒரு பாகவத சிரோன்மணியின் பாதம் பட்டு...என்று ஆயிரம் வியாக்யானம் கூறலாம்...
ஆனால், தாய்மை என்பது வெறும் மாயை அல்லவே!
பத்து மாதம் சுமந்தவளுக்குத் தானே அந்த பிள்ளையைப் பெற்ற  வலி தெரியும்?
இத்தனைக்கும் காரணம் விட்டலன் என்று அந்த பாண்டுரங்க விட்டலன் மீது அவளுக்கு அடாத வெறுப்பே வந்து விட்டது!
"விட்டலன்....விட்டலன்...என்று எப்போது பார்த்தாலும் பக்தி செய்தாயே....அந்த விட்டலன் இருக்கிறானா, இன்னும்?அவன் கையை இதோ வெட்டி விடுகிறேன்,பார்"
வெறி கொண்டவள் போல,பூஜை உள்ளிற்கு அரிவாளுடன் சென்றாள்,துளசி...
தான் செய்த அடாத காரியத்தினால்,கூனி குறுகி நின்ற கோராவிற்கு , 'விட்டலனை வெட்டப் போகிறேன்' என்று அவள் சொன்னதும், எங்கிருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ?
'என் விட்டலனின் கைகளையா,வெட்டப் போகிறாய்!'
கோபத்துடன், அவளை அடிக்க கையை ஓங்கிய போது தான்...
அந்த பெண்புலி கர்ஜித்தது...
"என்னைத் தொடாதே...உன் விட்டலனின் மீது ஆணை...என்னைத் தொடாதே!"
...................
ஆம்...இந்த துயர சம்பவம்  நடந்து முடிந்து, இப்போது இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.
ஒரு நாள்  கால் வலி உபாதையால்,முனகிக் கொண்டு,அப்படியே கோரா தூங்கி விட, மனம் பொறுக்க மாட்டாமல், அவருடைய கால்களில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வந்தாள்,துளசி..
சட்டென்று முழிப்பு வந்து விட்டது,அவருக்கு..
"என்னைத் தொடாதே! விட்டலனின் மீது ஆணை இட்டிருக்கிறாய்,நீ"
துளசியின் கண்களில் இருந்து அநிச்சையாய் வழிந்த  அந்த இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகளைக் கூட தன் கால்களின் மீது பட விடாமல், பொறுக்க முடியாத அந்த வலியிலும் தன் கால்களை நகர்த்திக் கொண்டார்,கோரா.
அவள் மீதுள்ள கோபத்தினால், அல்ல,அது!
விட்டலன் மீது அவள் வைத்துள்ள சத்தியத்தினால்!!
..................
வாரிசு வேண்டுமே என்கிற கவலை வந்து விட்டது துளசிக்கு.. அதனால் தன் வாழ்க்கையை தன் சகோதரி சாந்தனுவுடன்  பங்கிட்டு கொள்ளவும் துணிந்தாள்,அவள்.
'பகவத் சங்கல்பம் அப்படி என்றால், அப்படியே ஆகட்டும்!' - என்றார்,கோராவும்.
கல்யாணம் முடிந்ததும்,துளசியின் தகப்பனார்,கோராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
"மாப்பிள்ளை...சாந்தா பாய் வேறு ஆள் இல்லை...துளசியை நடத்துவது போல், அவளையும் நீங்கள்,நடத்த வேண்டும்!"
ஆம் என்பதற்கு அடையாளமாய் தலை ஆட்டினார்,கோரா.
துளசியைப் போலவே,சாந்தனுவையும் தன்னை தொட விடாமல் பார்த்துக் கொண்டார்,கோரா!
மனிதனுக்கு வாக்கு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்?
துயரத்தின் உச்சிக்கு சென்ற அந்த சகோதரிகள் இருவரும் ஒரு நாள்,'அவர் தானே,நம்மைத் தொடலாகாது...நாம் அவரைத் தொட்டால் என்ன' என்கிற தாபத்தினால்.....
ஆம், தாபம் தான் அது!
மரத்தில் படருகின்ற கொடிகளுக்குத் தான் பெண்மைக்கே உரிய அந்த தாபம் புரியும்..
தன்னுள் முளைத்த விதை...
பூவாகி......பிஞ்சாகி ...காயாகி...கனிந்த மரமாகும்,தாய்மையென்னும் தாபம்!
விழித்துக் கொண்ட கோரா விதிர் விதிர்த்து நின்றார்!
விட்டலனின் சத்தியத்தை மீறிய கைகள், இனி எதற்கு?
தன் கைகள் இரண்டையும் படாரென்று வெட்டிக் கொண்டு விட்டார்...
ஹா...என்ன ஒரு கோரம்!...என்ன ஒரு பயங்கரம்!! 
...............
கைகள் இரண்டையும் இழந்த நிலையில்,இப்போதும் கோரா மண்ணை பிசைந்து கொண்டு இருக்கிறார்...அவருடைய இரு பத்னிகளும் மண் பாண்டங்கள் செய்கிறார்கள்...ஆனால்,அவர் செய்ததைப் போல் அவ்வளவு நேர்த்தியாக இல்லை...விற்பனை சற்று மந்தம் தான்!
ஒரு கால கட்டத்தில், கடன் சுமை ஏறி, குடி இருக்கும் வீடு ஏலத்திற்கு வந்து விட்டது!
உடும்பு விட்டால் போதும் என்கிற நிலை கோராவிற்கு...
ஆனால், வீட்டை ஏலத்துக்கு எடுத்த ஸ்யாமளன் என்பவன் விடுவதாக இல்லை..
அவர் நிலை கண்டு இரங்கி, 'எனக்கு ஆதரவு யாரும் இல்லை...இந்த வீட்டிலேயே,நீங்கள் தயை  செய்து இருங்கள்...தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என இறைஞ்சி, அவனும் இப்போது அவர்களுடன் மண் பாண்டங்கள் செய்ய, பிழைப்பு ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது, கோராவிற்கு!
ஒரு நாள்......
எதேச்சையாக அந்த பக்கம் வந்தார்,நாம தேவர்..
ஸ்யாமளனைப் பார்த்த நாம தேவர் 'விட்டலா, இங்கேயா இருக்கிறாய், நீ' என ஆச்சர்யப்பட, கோரா கும்பருக்கு,அளவு கடந்த துயரம்...
"என் ஸ்வாமியையா, இத்தனை நாளாய், நான் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறேன்!"
மயங்கி விழுந்த கோரா, நினைவு திரும்பிய போது,அங்கு அந்த நீல மேக ஸ்யாமளனும் இல்லை..நாம தேவரும் இல்லை...
கோவிலில் பஜனை நடந்து கொண்டிருந்தது...
தன் பத்னி சமேதாராய் , பஜனை நடந்த இடத்துக்கு சென்றார் கோரா..
இவரைக் கண்டவுடன்,நாம தேவர் "வாரும்,கோரா ...இதைப் பிடியும்" என பஜனை சம்ப்ரதாயப்படி சிப்ளா கட்டைகளை கொடுக்க, டக்கென்று அதை வாங்கிக் கொண்டார்,கோரா!
ஆம்...அவருடைய தோள் பட்டைகளில் இருந்து இரண்டு கைகள் அப்போது முளைத்து அந்த சிப்ளா கட்டைகளை வாங்கிக் கொண்டன.
என்னே...அந்த பக்தவத்ஸலனின் கருணை!
விளிம்பு நிலை மனிதர்களிடம் தான் அந்த விட்டலனுக்கு என்ன ஒரு வாத்ஸல்யம்!!
அந்த அற்புதத்தை பார்த்தவர்கள் அப்படியே ஆடிப் போய் விட்டார்கள்.....
ஹர ஹர விட்டல!
ஜெய ஜெய விட்டல!!
விட்டலன் கோஷம் விண்ணைப் பிளந்தது!!!
.........................