Tuesday, August 29, 2017

நடந்தது ஒன்று! புரிந்தது ஒன்று!!


வேறு எதையும் வளர்க்கப் பிடிக்காமல் வெறும் தாடி மட்டுமே வளர்த்துக் கொண்டு,வெட்டியாகப் பொழுதை கழிக்கும் கணவனை ஏவினாள்,மனைவி. 
"த்தா....சும்மாத் தானே தின்னூட்டுக் கீறே...அப்பால மளிகை கடைக்குப் போயி, கொஞ்சம் பெருங்காயம் வாங்கியா!"
கணவனும் வெகு சிரத்தையாய் பெருங்காயம் வாங்கி வந்தான்...
ஆனால், என்ன ஒரு பரிதாபம்....துளிக்கூட பெருங்காய வாசனையே அந்த பாலீதீன் பையிலிருந்து வரவில்லை..அத்துணை கலப்படம்!
"த்த்த்த்தூ....இன்னா மனுஷன்யா,நீயி! இதுவாடா பெருங்காயம் ...யீ!"
முகத்தில் பெருங் காயம் ஏற்படுத்துமளவிற்கு வீசி எறியப்பட்ட அந்த பாலீதீன் பையுடன் மறுபடியும் அந்த கடைக்கு ஓடினான், அந்த ஆசிர்வதிக்கப்பட்ட கணவன்!
கடைக்கார கபோதியை பார்த்ததும்,அவன் வாய் அநிச்சையாய் சத்தம் போட்டது...
       காயமே இது பொய்யடா!
       வெறும் காற்றடைத்த பையடா!!
இந்த வார்த்தைகள் இன்னொரு வேலை வெட்டி இல்லாத தாடி காதில் விழுந்தது!
        ஆஹா......இந்த நிலை இல்லாத உடம்பை பற்றி என்ன ஒரு ஞான அலசல்!
      "யாக்கையைத் தானே கூறுகிறீர்கள்,சாமி!"
       இவனுக்கு, வெந்த புண்ணில் விரட்டி விரட்டி கொத்தும் மனைவி என்கிற அந்த கார்க்கோடக காக்கை ஞாபகம் வரவே, ஆமென பரிதாபமாக தலை அசைக்க...
       "நிலையாமையைப் பற்றி அரை நிமிட நேர மட்டில் அலசின ஞானத் தங்கமே ..  " என அவன் ஆர்ப்பரிக்க,
          சித்த நேரத்தில் சித்தனானான், இவன்!

No comments: